/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி போராட்டம்
ADDED : ஆக 16, 2025 02:04 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை, 9:00 மணி முதல் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், காலை, 11:00 மணிக்கு கருப்பு கொடியுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த முதியவரும், சமூக ஆர்வலருமான செல்லப்பன், 84, என்பவர் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, அனைத்து வி.ஏ.ஓ.,க்களும் தாங்கள் பணியாற்றும் இடத்திலேயே குடியிருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையை மக்கள் பார்வையில் படும்வகையில் கழுத்தில் தொங்கவிட வேண்டும். அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அலுவலர்கள் இல்லாத நேரங்களில் மின்சார பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகார் பெட்டி வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மோகன்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மதியம், 12:00 மணிக்கு அங்கிருந்து முதியவர் புறப்பட்டு சென்றார்.