ADDED : செப் 29, 2025 02:05 AM
நாமக்கல்:த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம் நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில், மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார். இதில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையின் பெயர் பலகை மீது ஏறி நின்றதால், கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதமாகின. இதுகுறித்து, மருத்துவமனை மேலாளர் அரிச்சந்திரன், 45, நாமக்கல் போலீசில் புகாரளித்தார்.
புகார்படி, நாமக்கல் போலீசார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், த.வெ.க., மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், விஜய் வருகையை முன்னிட்டு, அனுமதிக்கப்படாத இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில், பிளக்ஸ் பேனர்களை வைத்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது உள்பட, ஆறு வழக்குகள் த.வெ.க., மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.