/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி கூரை கான்கிரீட் இடிந்ததால் குழந்தைகள் அச்சம்
/
அரசு பள்ளி கூரை கான்கிரீட் இடிந்ததால் குழந்தைகள் அச்சம்
அரசு பள்ளி கூரை கான்கிரீட் இடிந்ததால் குழந்தைகள் அச்சம்
அரசு பள்ளி கூரை கான்கிரீட் இடிந்ததால் குழந்தைகள் அச்சம்
ADDED : ஆக 05, 2025 01:39 AM
ப.வேலுார், ப.வேலுார் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து விழுந்தது. அப்போது, மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பரமத்தி வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 14வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 42 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்கள் அமர்ந்திருந்த பள்ளி
அறையின் மேற்கூரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், அந்த அறையில் பல்வேறு இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. வகுப்பறையில் இருந்த ஜன்னல் கம்பிகள் வளைந்தன. அதிர்ச்சியடைந்த சில பெற்றோர், மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.இதையடுத்து, அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்களை, அருகில் இருந்த வகுப்பறைக்கு மாற்றினர். தகவலறிந்த அப்பகுதி கவுன்சிலர் சுகந்தி, பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
பள்ளியின் நுழைவு வாசல் மிகவும் சேதமடைந்துள்ளதால், தற்காலிகமாக மூடப்பட்டது. காம்பவுன்ட் சுவரின் ஒரு பகுதியை எடுத்துவிட்டு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். கழிவறை கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், மாணவர்கள் பயன்படுத்துவதில்லை. கழிவறையில் உள்ள கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் திறந்த வெளியில் மாணவர்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியின் முகப்பு வாசலை பார்த்தால் பள்ளிக்கூடம் என்று இதை யாரும் நம்ப மாட்டார்கள். மிகவும் மோசமான நிலையில் பள்ளி உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்பட்டால் ஓடிவரும் அதிகாரிகள் அதற்கு முன்னதாக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த நேரிடும். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.