ADDED : அக் 09, 2026 04:26 AM
திருச்செங்கோடு:பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு நகராட்சி மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.18.98 கோடி மதிப்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, நேற்று மாவட்ட கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்தார். எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனை ஊராட்சியில் விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கத்தின் கீழ், கிராம பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி சாணார்பாளையம் பகுதியில், துாய்மை இந்தியா இயக்கம் கீழ் ரூ.15.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், வடிகால் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சேகரிப்பு மையம் அமைப்பதற்கான இடம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கூட்டப்பள்ளி பகுதியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதன்பின் திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள நாராயணம்பாளையம் ஏரி கரையில் ரூ.39.17 லட்சம் மதிப்பில் நடந்து வரும் மரம் நடும் பணிகளை ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவம்பாளையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் நடவு செய்யப்பட்டுள்ள, 500 மரக்கன்றுகளையும் கலெக்டர் மதுபாலன் பார்வையிட்டார்.
