/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் செங்கல் சூளைகளை மூட கட்டாயப்படுத்துவதாக புகார்
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் செங்கல் சூளைகளை மூட கட்டாயப்படுத்துவதாக புகார்
சுற்றுச்சூழல் பாதிப்பால் செங்கல் சூளைகளை மூட கட்டாயப்படுத்துவதாக புகார்
சுற்றுச்சூழல் பாதிப்பால் செங்கல் சூளைகளை மூட கட்டாயப்படுத்துவதாக புகார்
ADDED : ஜூன் 17, 2025 02:28 AM
சேந்தமங்கலம், 'சுற்றுச்சூழல் பாதிப்பால், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியில் கையால் தயாரிக்கப்படும் செங்கல் சூளைகளை மூட வேண்டும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, முத்துக்காப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 70க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கை செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுக்கு, நான்கு மாதம் மட்டுமே செங்கல் தயார் செய்யப்பட்டு வருகிறது. கை சூளையில் தயார் செய்யப்படும் செங்கற்கள் வெயிலில் நன்றாக காய்ந்து, அதன் பின் சூளையில் வைத்து எரிக்கப்படுவதால், இந்த செங்கற்களுக்கு இன்றளவும் வரவேற்பு உள்ளது.
கடந்த மாசி, பங்குனி மாதம் முதல் இப்பகுதியில் கூலியாட்களை வைத்து தினமும் செங்கல் தயார் செய்து வருகின்றனர். இந்த செங்கற்கள் நன்றாக வெயிலில் காய்ந்தபின், சூளைகளில் அடுக்கி வேப்பன், வாதன் உள்ளிட்ட மரங்களை கொண்டு எரித்து தரமான செங்கற்களை விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற சூளைகளில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் சூளைகளை மூட வேண்டும் என, கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கை செங்கல் சூளை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: வசதி படைத்தவர்கள் பெரியளவில் செங்கல் சூளைகள் வைத்து, ஆண்டு முழுவதும் செங்கல் தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், எங்களைப்போல் வசதியில்லாத சிறிய செங்கல் சூளை தயாரிப்பாளர்களிடம் வந்து பல்வேறு குறைகளை கூறி வருவதுடன், இனி கை சூளைகள் இயங்க கூடாது; மூட வேண்டும் என தெரிவிக்கின்றனர். இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ரகுநாதனிடம் கேட்டபோது, ''கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், செங்கல் சூளைகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்தபடி இருந்தால் மட்டுமே செங்கல் சூளைகளுக்கு அனுமதி அளிக்கப்படும்,'' என்றார்.