/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழி பண்ணையாளர்களுக்கு மே 3ல் கருத்து கேட்பு கூட்டம்
/
கோழி பண்ணையாளர்களுக்கு மே 3ல் கருத்து கேட்பு கூட்டம்
கோழி பண்ணையாளர்களுக்கு மே 3ல் கருத்து கேட்பு கூட்டம்
கோழி பண்ணையாளர்களுக்கு மே 3ல் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 01:47 AM
நாமக்கல்,:முட்டை விலை நிர்ணய குளறுபடியால், பாதிப்புக்குள்ளாகும் சிறிய கோழி பண்ணையாளர்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் மே, 3ம் தேதி நடைபெறும் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள, 1,100 கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, சத்துணவு மற்றும் ஏற்றுமதிக்கும், வெளிமாநிலங்களுக்கும், உள்ளூர் தேவைக்கும் அனுப்பப்படுகின்றன.
கோழி பண்ணையாளர்கள் அறியும் வண்ணம் முட்டை விலை நிர்ணயத்தை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல அலுவலகம் தினசரி இணையம் வழியாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்கி, விலை குறைப்பை அமல்படுத்தி வருவதாகவும், 40, 50 காசுகள் குறைவாக நிர்ணயித்து முட்டைகளை கொள்முதல் செய்வதாகவும், சிறிய பண்ணையாளர்கள் குற்றம் சாட்டினர். அதேபோல், பெரிய பண்ணையாளர்கள் முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் தேக்கி வைத்து, வெளிச்சந்தையில் விற்பனைக்கு அனுப்பி லாபம் பார்ப்பதாகவும், வியாபாரிகளுடன் இணக்கமாக இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்தது.
கடந்த 17ம் தேதி சிறிய பண்ணையாளர்கள் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு கோழி பண்ணையாளர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முட்டை விலை குளறுபடியை தீர்க்கவும், வியாபாரிகள் விலையை குறைத்து கேட்பதை தடுக்கவும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில், நேற்று சிறிய பண்ணையாளர்களுடன், மண்டல தலைவர் சிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சத்துணவு, ஏற்றுமதிக்கு சிறிய பண்ணையாளர்களிடம் முட்டை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முட்டை பவுடர் தொழிற்சாலை விரைவில் நாமக்கல்லில் அமைய உள்ளதால், முட்டைகளின் தேவை அதிகரிக்கும். வியாபாரிகள் விலையை குறைத்து கேட்பது தடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து பண்ணையாளர்களின் கருத்துக்களை அறியும் வகையில் மே 3ம் தேதி நாமக்கல்லில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும்
என்றனர்.