/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உபரி ஆசிரியர் பணி ஒதுக்குவதில் பாரபட்சம்; எருமபட்டி வட்டார கல்வி அலுவலர் மீது புகார்
/
உபரி ஆசிரியர் பணி ஒதுக்குவதில் பாரபட்சம்; எருமபட்டி வட்டார கல்வி அலுவலர் மீது புகார்
உபரி ஆசிரியர் பணி ஒதுக்குவதில் பாரபட்சம்; எருமபட்டி வட்டார கல்வி அலுவலர் மீது புகார்
உபரி ஆசிரியர் பணி ஒதுக்குவதில் பாரபட்சம்; எருமபட்டி வட்டார கல்வி அலுவலர் மீது புகார்
ADDED : நவ 29, 2024 07:38 AM
நாமக்கல்: உபரி ஆசிரியர்களுக்கு, பணி ஒதுக்குவதில் பாரபட்சமாக நடப்பதாக, எருமபட்டி வட்டார கல்வி அலுவலர் மீது, ஆசிரியர்கள் சங்கம் பகிரங்க புகார் அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில், 56க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின்படி எருமப்பட்டி ஒன்றியத்தில், நவலடிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஜீவா, பவுத்திரம் தொடக்கப்பள்ளி ஆசிரியை மைதிலி, கஸ்தாரிப்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன் உள்ளிட்ட எட்டு பேர் உபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளனர்.
எருமப்பட்டி ஒன்றியத்தில், உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்புவதே இல்லை. 3 கி.மீ., தொலைவில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்காமல், 20 கி.மீ., தொலைவில் உள்ள ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக தற்போது, எருமபட்டி வட்டார கல்வி அலுவலராக உள்ள அருண் பதவியேற்றதில் இருந்து, இது போன்ற பாரபட்சம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ராமராசு கூறியதாவது: மூலக்காடு தொடக்கப்பள்ளியில் மாற்றுப்பணிக்கு நேற்று, 20 கி.மீ., தொலைவில் உள்ள மற்றொரு பள்ளியில் உள்ள ஆசிரியரை வட்டார கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார். ஆனால் அருகில், 3 கி.மீ., தொலைவில் உள்ள நவலடிப்பட்டி, பவுத்திரம் பகுதியில் உள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்புவதே இல்லை. இதற்கு சரியாக காரணத்தை கூற மறுக்கிறார்.
அதேபோல், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார். பணி சார்ந்த சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எப்போதுமே எடுப்பதில்லை. பள்ளி ஆய்வின்போதும், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். இது ஆசிரியர்களுக்கு வேதனையளிக்கிறது. இது குறித்து மாவட்ட கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் பணி அழுத்தத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சோர்வடைவர். சாலையில் நின்று போராட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கூறினார்.
இது குறித்து, வட்டார கல்வி அலுவலர் அருண் கூறுகையில், ''எட்டு உபரி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வசதிக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களை அனுப்பி வருகிறோம். ஆசிரியர் செல்வகுமார் சம்பள வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வெப் காப்பியாகத்தான் கொடுத்துள்ளனர். தீர்ப்பு உண்மை நகல் வழங்கவில்லை. இது குறித்து வக்கீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,'' என்றார்.