/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிர்வாகிகள் ஆதரவுடன் மது விற்பனை தி.மு.க., நகர துணை செயலர் ஆர்ப்பாட்டம்
/
நிர்வாகிகள் ஆதரவுடன் மது விற்பனை தி.மு.க., நகர துணை செயலர் ஆர்ப்பாட்டம்
நிர்வாகிகள் ஆதரவுடன் மது விற்பனை தி.மு.க., நகர துணை செயலர் ஆர்ப்பாட்டம்
நிர்வாகிகள் ஆதரவுடன் மது விற்பனை தி.மு.க., நகர துணை செயலர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2025 11:11 PM

ப.வேலுார்:'ப.வேலுாரில், தி.மு.க., மாவட்ட பொறுப்பில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஆதரவுடன், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது; இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, அக்கட்சியின் நகர துணை செயலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரை சேர்ந்தவர் சிவகுமார், 50, தி.மு.க., நகர துணை செயலர். இவர், நேற்று காலை, 9:00 மணிக்கு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள சாலையில் படுத்து, தி.மு.க., கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது, 'ப.வேலுாரில் உள்ள, இரண்டு டாஸ்மாக் பார் மற்றும் காமாட்சி நகர் டாஸ்மாக் பார்களில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.
இதை தடுக்க வேண்டிய உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார், கண்டும் காணாமல் உள்ளனர்' என, கோஷமிட்டார்.
அப்போது பணியிலிருந்த போலீசார் ஓடிவந்து, சிவகுமாரை குண்டுக்கட்டாக துாக்கி, ஸ்டேஷனுக்குள் கொண்டு சென்று சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அதையும் மீறி போலீசாரை கண்டித்து கோஷமிட்டார்.
மேலும், 'சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வெளியே செல்வேன்' என, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
செய்வதறியாது திகைத்த போலீசார், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் சென்று, இரண்டு டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த, ப.வேலுாரை சேர்ந்த தேவேந்திரன், 41, மணிகண்டன், 48, ஆகிய இருவரையும் கைது செய்து, 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சிவகுமார் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
தி.மு.க.,வில் மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் ஆதரவுடன் மது விற்பனை நடப்பதால், உள்ளூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் தடுத்து நிறுத்த தயக்கம் காட்டுகின்றனர். ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நானே போராட்டத்தில் ஈடுபட்டேன். - சிவகுமார் தி.மு.க., நகர துணை செயலர்