/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவர்னரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
கவர்னரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 06:49 AM
நாமக்கல்: தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., அரசு இயந்திரத்தை செயல்பட வைக்க முடியாமல் முட்டுக்கட்டையாக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபை தொடங்கும்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதும் வழக்கம். கவர்னர் ரவி, முதலில் தேசிய கீதத்தை பாடச்சொல்லி மரபுக்கு மாறாக செயல்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வை போல், வெளிநடப்பு செய்கிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், கவர்னர்கள் இதுபோன்று நடந்து கொண்டதில்லை. மாநில அரசு, மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்படும் அரசின் திட்டங்களை கவர்னர் புறக்கணித்து வருகிறார்.சித்த மருத்துவ கல்லுாரி பாளையங்கோட்டை, சென்னையில் உள்ளது. இவற்றை இணைத்து சித்த மருத்துவ பல்கலை தொடங்க வேண்டும் என, தமிழக முதல்வர் முடிவு செய்து, அதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைத்து, ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும், இதுவரை அந்த கோப்பிற்கு கவர்னர் கையெழுத்துபோடவில்லை. பல்கலை வேந்தராக உள்ள கவர்னர், துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடியும்போது, உரிய காலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கவில்லை. அதனால், தமிழகத்தில் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களால், தமிழக அரசுக்கு நல்ல பெயர் வந்து சேரவிடாமல், எதிர்க்கட்சி உறுப்பினரை போல கவர்னர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.