/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்
/
நாமக்கல்லில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்
ADDED : நவ 15, 2024 02:19 AM
நாமக்கல், நவ. 15-
கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து, நாமக்கல்லில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பாலாஜி என்பவரை, நேற்று முன்தினம் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தியுள்ளார். அதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் மருத்துவ பணிகளை புறக்கணித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் நாமகிரிபேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் தயாசங்கர் தலைமை வகித்தார். டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவிகள் என, 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இனி வரும் நாட்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
* திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முன், தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் டாக்டர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவர் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.