ADDED : செப் 15, 2025 02:08 AM
ப.வேலுார்:ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 550 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பண்ணைகளில் வளர்ப்பு கிராஸ் நாட்டுக்கோழி, கடந்த வாரம் கிலோ, 350 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
புரட்டாசி பிறப்பையொட்டி, பக்தர்கள் விரதத்தை தொடங்கி இருப்பதால் வீடுகளில் அசைவத்தை சமைப்பதில்லை. வீடுகளை சுத்தம் செய்து தற்போதே விரதத்தை தொடங்கி உள்ளனர். அதனால் ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவடைந்தது.