/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் முக்கோண பூங்கா அருகே ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
/
ப.வேலுார் முக்கோண பூங்கா அருகே ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
ப.வேலுார் முக்கோண பூங்கா அருகே ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
ப.வேலுார் முக்கோண பூங்கா அருகே ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:38 AM
ப.வேலுார்: ப.வேலுார் முக்கோண பூங்கா அருகே, ஓடை புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை, டவுன் பஞ்., நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ப.வேலுாரில், 18 வார்டுகள் உள்ளன. இதில், தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம்பாளையம், வெட்டுக்காட்டு புதுார் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர், சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாக சென்று, ராஜ வாய்க்காலில் கலந்துவிடும். சில நேரங்களில் மழை அதிகமாக பெய்யும்போது, அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கும். மழைநீரை வெளியேற்ற சாக்கடை அமைத்து இருந்தாலும் மழைக்காலங்களில் போதுமானதாக இல்லை. தற்போது, ப.வேலுார் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.மேலும், அரசு கால்நடை மருத்துவமனை வாசலிலேயே ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஆடு, மாடுகளை சிகிச்சைக்காக கொண்டு வரும் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், புறம்போக்கு இடத்தில் கட்டட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண்கொட்டி மேடாக்கி உள்ளனர். மழை பெய்யும்போது மழை தண்ணீர் சாலையில் தேங்கி நின்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ப.வேலுார் டவுன் பஞ்., அதிகாரிகள், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.