/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்தியாவில் முதல் முறையாக மரவள்ளியில் உணவு திருவிழா
/
இந்தியாவில் முதல் முறையாக மரவள்ளியில் உணவு திருவிழா
இந்தியாவில் முதல் முறையாக மரவள்ளியில் உணவு திருவிழா
இந்தியாவில் முதல் முறையாக மரவள்ளியில் உணவு திருவிழா
ADDED : செப் 20, 2024 02:36 AM
ராசிபுரம்: மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூவுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள் உணவு திருவிழாவை நடத்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று நாமகிரிப்பேட்டையில் உணவு திருவிழா நடத்துவதற்கான, முன்னேற்பாடுகள் குறித்து வேளாண் அதிகாரிகள், விவசாயிகள், திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், நபார்டு வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி ஜெகநாதன், மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மரவள்ளியில் பல புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்னும் பழைய ரகங்களையே விளைவித்து வருகின்றனர். இதனை மாற்றும் விதமாக தான், மரவள்ளி கிழங்கு உணவு திருவிழா நவ., 4,5 ஆகிய தேதிகளில் ராசிபுரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரவள்ளி பொருட்களில் உணவு திருவிழா நடப்பது இந்தியாவில் இதுதான் முதல் முறை.
விழாவில் மரவள்ளி ரகங்கள், அதன் சிறப்பு குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதில், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மட்டுமின்றி வேளாண் கல்லுாரி மாணவர்களும் தங்கள் கருத்துகளை பேச உள்ளனர். மரவள்ளி பயிரிட்டு விளைச்சலை அதிகரிப்பது, மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிப்பதால் கிடைக்கும் லாபம் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளனர். மதிப்பு கூட்டு பொருட்களில் மரவள்ளி விவசாயிகளுக்கு, இரண்டு முதல் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
ரேஷன் கடையில் ஜவ்வரிசி பொருட்களை விற்பனை செய்யவும், பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் மரவள்ளி உணவுகளை சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் இதற்கான வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கூறினார்.
நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் ரமேஷ், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் வேல்முருகன், உழவர் மன்ற நிர்வாகி பரமசிவம் மற்றும் தமிழக பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு துணைத்தலைவர் லோகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.