/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் 5 இடங்களில் மண் சரிவு சாலையில் உருண்ட ராட்சத பாறைகள்
/
கொல்லிமலையில் 5 இடங்களில் மண் சரிவு சாலையில் உருண்ட ராட்சத பாறைகள்
கொல்லிமலையில் 5 இடங்களில் மண் சரிவு சாலையில் உருண்ட ராட்சத பாறைகள்
கொல்லிமலையில் 5 இடங்களில் மண் சரிவு சாலையில் உருண்ட ராட்சத பாறைகள்
ADDED : டிச 14, 2024 01:05 AM
நாமகிரிப்பேட்டை, டிச. 14-
கொல்லிமலை மாற்று வழிப்பாதையில், நேற்று திடீரென மண், பாறைகள் சரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொல்லிமலைக்கு, காளப்பநாயக்கன்பட்டி அடுத்த காரவள்ளியில் இருந்து, 75 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில், 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதனால், இந்த வழியாக செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதுமட்டுமின்றி கொல்லிமலையில் கிழக்கு, வடக்கு பகுதிக்கு செல்ல, மலையிலேயே, 30 கிலோ மீட்டர் துாரம் வரை செல்ல வேண்டியிருந்தது. இதனால், மாற்று வழியாக நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது. கொண்டை ஊசி வளைவுகள் குறைவாகவும், ஆபத்து குறைவான பாதையாகவும் இந்த மாற்று வழிப்பாதை அமைந்துள்ளது. இதனால், ஆத்துார், தம்மம்பட்டி, புதுச்சேரி, சென்னையில் இருந்து வருபவர்கள் இவ்வழியாகத்தான் கொல்லிமலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. முக்கியமாக, நேற்று முன்தினம் அதிகாலை முதல் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலைக்கு செல்லும் மாற்றுப்பாதையில், நேற்று மதியம் ஐந்து இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதேபோல், 18, 21, 32 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளிலும், சோளக்காடு என்ற பகுதியிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. டூவீலர்கள் மட்டும் சென்று வந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் சுப்பரமணி ஆகியோர் பார்வையிட்டனர். மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை வலிமையாக்கும் பணியில் ஈடுபட்டனர்.