ADDED : பிப் 13, 2024 12:22 PM
ப.வேலுார்: ப.வேலுார் பகுதியில் வாத்து இறைச்சி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது. -
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பகுதியில் வாத்து இறைச்சி, முட்டை விற்பனை அதிகளவில் நடக்கிறது. ப.வேலுார், காவிரி நான்கு வழிச்சாலையில், இட்லிக்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். காவிரியாறு அருகே உள்ளதால், வாத்து வளர்ப்புக்கு ஏற்ற இடமாக உள்ளது. முழுக்க முழுக்க இறைச்சிக்காகவே வளர்க்கப்படுவதால், காலை, இரவு நேரத்தில் இப்பகுதியில் இட்லிக்கு, 'சைடு டிஷ்' ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம், உயிருடன் முழு வாத்து, 250 ரூபாய், வாத்து முட்டை, 10 ரூபாய், சமைத்த கறி, 350 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, விலை உயர்ந்துள்ளதால், உயிருடன் முழு வாத்து, 350 ரூபாய், முட்டை, 15 ரூபாய், சமைத்த கறி, 450 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது. சளித்தொல்லையை நீக்க, வாத்துக்கறியை அதிகம் சமைத்து சாப்பிடுவதால், பனிக்காலமான தற்போது விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வாத்து கறிக்கடை உரிமையாளர் கூறியதாவது:
ப.வேலுார் பகுதியில், 15க்கும் மேற்பட்ட வாத்துக்கறி கடைகள் உள்ளன. தற்போது, பனிப்பொழிவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளித்தொல்லைக்கு ஆளாகின்றனர். வாத்துக்கறி சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்குவதால், வாத்து விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் அதன் விலையும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.