/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 01, 2025 01:26 AM
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் தனியார் கல்லுாரியில், அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து, கல்லுாரி இயக்குனர் செல்வகுமரன், முதல்வர் விஜயகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிகண்மணி மற்றும் மாணவர் ஒருவர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். போட்டியில், 800க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். எட்டு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், இசை போட்டியில் தோல், துளை மற்றும் நரம்பு கருவிகளில் மாணவர்கள் இசை மீட்டினர். நடனத்தில் பரதநாட்டியம், கரகாட்டம் கும்மியாட்டம், பொம்மலாட்டம் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களை மாணவ, மாணவியர் ஆடி அசத்தினர். கவின் கலைகளான நுண்கலையில் ஓவியம், சிற்பம், கைவினை பொருட்கள், கேலிச்சித்திரம் மற்றும் ரங்கோலி ஆகிய படைப்புகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். பாடலில், நாட்டுப்புற பாடல், செவ்வியல் இசை மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவை பாடப்பட்டன. இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான, 'கலைத்திருவிழா' போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை, ஆசிரிய பயிற்றுநர்கள் சென்றாய பெருமாள், முருகேசன், லதா ஆகியோர் செய்திருந்தனர்.

