ADDED : நவ 26, 2024 01:53 AM
குட்கா பறிமுதல்; 3 பேர் கைது
குமாரபாளையம், நவ. 26-
குமாரபாளையம் போலீஸ் எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், பொன்னுசாமி, ராம்குமார், வரதராஜன் உள்ளிட்டோர், நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் - கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தனியார் திருமண மண்டபம் அருகே, சரக்கு வாகனத்தில் இருந்து, 'மாருதி ஆம்னி' மற்றும் 'ஹோண்டா' கார்களில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பான்பராக், ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள், 1.4 டன் இருப்பது தெரியவந்தது.
இதனை விற்பனைக்கு கடத்தி செல்ல முயன்ற, கவுந்தப்பாடியை சேர்ந்த தனபால், 46, கோவை, கணபதி நகரை சேர்ந்த ராம்குமார், 38, துாத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், ஒரு சரக்கு வாகனம், 2 கார்கள், 1.4 டன் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.