/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூறாவளியுடன் கனமழை; வாழைகள் சேதம்
/
சூறாவளியுடன் கனமழை; வாழைகள் சேதம்
ADDED : ஏப் 09, 2025 02:41 AM

நாமக்கல்:தொடர்ந்து இரண்டாவது நாளாக சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், 3,000 வாழை மரங்கள் சேதமாகின.
நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 6ல், மாவட்டம் முழுதும் ஒரு சில இடங்களில் கன மழையும், பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. எருமப்பட்டி பகுதியில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், தேவராயபுரத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து நாசமாகின.
விவசாயி ஒருவர் கூறுகையில், 'தோட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தேன். கடந்த, 6ல் அடித்த சூறாவளி காற்றில், 1,000 மரங்கள் முறிந்து விழுந்தன. அதன் வாயிலாக, 7 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
அதேபோல, தோட்டமுடையாம்பட்டி, சிங்களகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், சூறாவளி காற்றில் நாசமாகின. இதனால் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வேலம்பாளையம், ஆட்டையாம்பாளையம், சேடபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான வாழை மரங்கள், சூறைக்காற்றுக்கு வேருடன் சாய்ந்தன.
விவசாயிகள் கூறுகையில், 'எட்டு மாதங்கள் முன் வாழைகள் பயிரிட்டோம். ஏக்கருக்கு, 900 கன்றுகள் என, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்டன. அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், சூறைகாற்றுக்கு சாய்ந்துள்ளன. குலை ஒன்றுக்கு, 25 கிலோ என, ஏக்கருக்கு, 2.5 டன் கிடைக்கும். தற்போது உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.