/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட ஐந்திலை கரைசல் பயன்படுத்த யோசனை
/
பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட ஐந்திலை கரைசல் பயன்படுத்த யோசனை
பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட ஐந்திலை கரைசல் பயன்படுத்த யோசனை
பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை விரட்ட ஐந்திலை கரைசல் பயன்படுத்த யோசனை
ADDED : டிச 09, 2024 07:11 AM
நாமகிரிப்பேட்டை: 'பயிர்களை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்திட, ஐந்திலை கரைசலை பயன்படுத்லாம்' என, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐந்திலை கரைசல் பூச்சி விரட்டியாக செயல்பட்டு பயிர்களைப் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.இக்கரைசலை தயாரிக்க, ஐந்து வகையான இலைகளை நாம் பயன்படுத்த வேண்டும். மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில், வேப்ப இலை, ஊமத்தை, நொச்சி, எருக்கு மற்றும் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை சம அளவில் எடுத்து சிறிது கோமியம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், இரண்டு மடங்கு கோமியத்தை கலக்க வேண்டும். அதாவது இலைகளை, தலா ஒரு கிலோ என்ற விகிதத்தில் எடுத்திருந்தால், 5 கிலோ கிடைக்கும்.
இதனுடன், 10 லிட்டர் கோமியத்தை கலந்து இக்கரைசலை, 15 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும். ஈக்கள் முட்டையிடுவதை தவிர்க்க எப்பொழுதும் மூடியே வைத்திருக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பின், இந்த ஐந்திலை கரைசலை வடிகட்டி ஆறு மாதங்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த கலவையை, 10 சதவீதம் அதாவது, 10 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் ஐந்திலை கரைசலை கலந்து அனைத்து வகையான பயிர்களுக்கும், 'தெளித்தல் முறையில்' பயன்படுத்தலாம்.
பூச்சி நோய் தாக்குதல் வருவதற்கு முன்பாக இதை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு முதலில், 3ஜி கரைசலை பயன்படுத்தியிருந்தால் அடுத்து, 15 நாட்கள் கழித்து இந்த கரைசலை பயன்படுத்தலாம். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதனால் பயிர் கருகிவிடும் அபாயம் உள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த கரைசல்களுடன் எந்த விதமான பூச்சிக்கொல்லிகளையும், செயற்கை உரங்களையும் கலந்து தெளிக்க கூடாது. இந்த ஐந்திலை கரைசலானது பயிர்களை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து தடுப்பதோடு பயிர் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.