/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கள்ளச்சாராய வேட்டை
/
கொல்லிமலையில் கள்ளச்சாராய வேட்டை
ADDED : ஜூன் 29, 2025 12:54 AM
சேந்தமங்கலம், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீசார், கொல்லிமலை புளியஞ்சோலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என, திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அதிக மூலிகை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சிலர், கள்ளச்சாராயம் காய்ச்சி வெளிமாவட்டங்களுக்கு தலைச்சுமையாக கொண்டுச்சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதனால், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பில், அடிக்கடி கள்ளச்சாராய வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், நேற்று அதிகாலை நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., தனராசு மற்றும் அதிரடிப்படை போலீசார், 30க்கும் மேற்பட்டோர், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மிக அடர்ந்த வனப்பகுதியான புளியஞ்சோலையில் இருந்து கொல்லிமலை உச்சியில் உள்ள ஆலவாடி, தொம்பலம் உள்ளிட்ட வனப்பகுதிகளின் முட்புதர்கள், பாறைகளின் மறைவுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா எனவும், கள்ளச்சாராய ஊறல்கள் முட்புதர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா எனவும், 25 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று போலீசார் சாராய வேட்டை நடத்தினர்.
மேலும், மலைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களை சந்தித்து, கள்ளச்சாராயம் காய்ச்சினால் போலீசாரால் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், கள்ளச்சாராய தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.