/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கைலாசநாதர் கோவிலில் சுதந்திர தின பொது விருந்து
/
கைலாசநாதர் கோவிலில் சுதந்திர தின பொது விருந்து
ADDED : ஆக 16, 2025 02:02 AM
திருச்செங்கோடு, இந்தியாவின், 79வது சுதந்திர தினத்தையொட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில்களில் பொது விருந்து நடந்தது. எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நகராட்சி சேர்மேன் நளினிசுரேஷ்பாபு, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொது விருந்தில் முக்கிய பிரமுகர்கள் சாப்பிட்டு சென்ற பின், அடுத்த பந்தியில் அமர, 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் காத்திருந்தனர். ஆனால், உணவு தீர்ந்துவிட்டதாக கூறி, சாப்பிட பந்தியில் அமர்ந்திருந்தவர்களை எழுந்திருக்க வைத்தனர். தொடர்ந்து, சேர்களை எடுத்து அடுக்கி வைத்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாப்பிடாமல் வெளியே வந்தவர்களிடம் கேட்டபோது, 'சாப்பிட பந்தியில் அமர்ந்திருந்த எங்களை எழுந்து போக சொல்லிவிட்டனர். 500 பேருக்கு மட்டுமே சமைத்ததாகவும், 1,000 பேர் வந்து விட்டதால் சாப்பாடு தீர்ந்து விட்டது' என, வருத்தத்துடன் தெரிவித்தனர்.
ஆஞ்சநேயர் கோவிலில்...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.எல்.ஏ., ராமலிங்கம், துணை மேயர் பூபதி, உதவி ஆணையர் இளையராஜா உள்ளிட்டோர், பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
அதேபோல், நாமக்கல் தட்டாரத்தெரவில் உள்ள பிரசித்தி பெற்ற பலபட்டரை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.