/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
/
குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : நவ 01, 2025 01:14 AM
திருச்செங்கோடு, 'இறைச்சி கழிவு, குப்பைகளை, கோழிக்கால்நத்தம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே பொதுமக்கள் கொட்டினால், அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சியின் நகர்மன்ற அவசர கூட்டம், நேற்று சேர்மன் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடந்த விவாதம் வருமாறு:
கார்த்திகேயன், அ.தி.மு.க., கவுன்சிலர்: நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: நாய்கள் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நாய் தொல்லை குறையும்.
ராஜா, தி.மு.க., கவுன்சிலர்: திருச்செங்கோடு நகராட்சி, கோழிக்கால்நத்தம் ரோட்டில் உள்ள சுடுகாடு பகுதியில், இறைச்சி கழிவு, ஓட்டல் கழிவுகளை மூட்டைகளாக கட்டிக்கொண்டு வந்து வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய வருபவர்கள், மாலை உள்ளிட்ட கழிவு பொருட்களை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சேர்மன்: கோழிக்கால்நத்தம் ரோட்டில், தினமும் நகராட்சி சார்பில் குப்பை அகற்றப்படும். அப்பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி கழிவு, ஓட்டல் கழிவுகளை கடை உரிமையாளர்கள் கொட்டக்கூடாது என, நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்படும். மீறி கொட்டினால் அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாதேஸ்வரன், தி.மு.க., கவுன்சிலர்: பிரதான சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.
சேர்மன்: சென்டர் மீடியனில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பப்படும்.
முருகேசன், தி.மு.க., கவுன்சிலர்: கொல்லப்பட்டி பகுதியில் வீட்டிற்கு வெளியே கார்களை நிறுத்தி வைத்துவிடுவதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அதனால், நகராட்சிக்கு சொந்தமான இடங்களில், 'பார்க்கிங்' உருவாக்கினால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.
கமிஷனர்: நகராட்சி இடங்கள் அதிகமாக இருப்பதால், 'பார்க்கிங்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மல்லிகா, அ.தி.மு.க., கவுன்சிலர்: கூட்டப்பள்ளி பகுதிக்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டப்பள்ளியில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது.
சேர்மன்: பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூலாம்பட்டி குடிநீர், கூட்டப்பள்ளியில் உள்ள, மூன்று வார்டுகளுக்கும் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

