/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
/
முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
ADDED : ஜூலை 08, 2025 01:49 AM
மோகனுார் மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்.,க்குட்பட்ட கீழபேட்டபாளையத்தில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 29ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, மூலவர் மாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, மாலை, 4:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து, உற்சவர் முத்துமாரியம்மன் கரகம், வேல் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று கிடாவெட்டும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.