ADDED : ஏப் 23, 2024 03:57 AM
மகாவீரர் ஜெயந்தியன்று
மது விற்ற 8 பேர் கைது
நாமக்கல்: மகாவீரர் ஜெயந்தி அன்று, மதுபான கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்த உத்தரவை மீறி, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பெட்டிக்கடை மற்றும் சந்து பகுதிகளில் மது விற்பனை நடப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உத்தரவை மீறி பெட்டிக்கடை, சந்து பகுதிகளில், மது விற்பனை செய்த, 8 பேரை போலீசார் கைது செய்து, 161 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பா.ஜ., நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறைசேந்தமங்கலம்: சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 57; பா.ஜ., ஒன்றிய துணைத்தலைவர். இவருக்கும், குப்பநாய்க்கனுாரை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும், கடந்த, 2016ல் வரவு-செலவு இருந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில், ராமசாமி மனைவி மணிமேகலையின் கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்க செயினை, செல்லமுத்து பறித்துக்கொண்டதாக, சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, நேற்று சேந்தமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் செல்லமுத்துவிற்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
டூவீலர் திருடிய மர்ம நபர்கள்பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 30. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 20ல் இரவு வீட்டின் முன் தன் டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, டூவீலர் காணவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை பார்த்த போது, நள்ளிரவு நேரத்தில் இரண்டு வாலிபர்கள் வந்து டூவீலரை திருடி சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில், நேற்று புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

