ADDED : மே 17, 2024 02:27 AM
கார் மோதிய விபத்தில்
விவசாயி படுகாயம்
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே கலியனுாரை சேர்ந்தவர் அருணாச்சலம், 65, விவசாயி. நேற்றுமுன்தினம் மாலை 5:00 மணியளவில் டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் மொபட்டில், சேலம் - கோவை அருவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த போர்டு ஐ கான் கார் ஓட்டுனர், இவரது டூவீலர் மீது மோதியதில் அருணசலம் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுனர் இடைப்பாடியை சேர்ந்த ராஜீவ், 39, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தெரு நாய்கள் கடித்து
ஐந்து ஆடுகள் பலி
மோகனுார்: மோகனுார் அருகே தெரு நாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் பலியாகின.
மோகனுார் அருகே வளையப்பட்டி ரோஜா நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 57, விவசாயி. இவர் தன் வீட்டின் முன் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஆடு கொட்டகைக்குள் தெரு நாய்கள் புகுந்தன. கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்தன. ஆடுகள் கூச்சலிடவே, அங்கு படுத்திருந்த விஸ்வநாதன் எழுந்து வந்து நாய்களை துரத்தியுள்ளார்.
ஆனால் அதற்குள் நாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் இறந்து விட்டன. கால்நடை உதவி மருத்துவர் கலைமணி சம்பவ இடத்திற்கு சென்று, ஐந்து ஆடுகளையும் பிரேத பரிசோதனை செய்தார். தொடர்ந்து ஆடுகளை அதே பகுதியில் குழிதோண்டி மூடினார். மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

