ADDED : மார் 18, 2024 02:55 AM
ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில்
பணியை விரைந்து முடிக்க உத்தரவு
சேந்தமங்கலம்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், பாதுகாப்பு பணி குறித்து வன அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்ட வன அலுவலராக இருந்த ராஜாங்கம் மாற்றப்பட்டு, புதிய வன அலுவலராக கலாநிதி பெறுப்பேற்றார். இதையடுத்து, அவர் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு குறித்தும், அதிக மழை பெய்யும் போது நீர் வீழ்ச்சியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரப்பளீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, கொல்லிமலை வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத்செயற்குழு கூட்டம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், செயற்குழு கூட்டம், தலைவர் சபரிநாதன் தலைமையில் நடந்தது. இதில், தமிழகத்தில் பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு, ஒருவேளை பூஜையாவது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில் சொத்துகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் பட்டாவாக உள்ளது. அதனை மீட்க வேண்டும். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கிண்டல் செய்யும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்ட தலைவர் கஸ்துாரி, மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன், நகர தலைவர் வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
துப்பாக்கியை ஒப்படைக்க உத்தரவுநாமக்கல்: 'தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதை அடுத்து துப்பாக்கி வைத்துள்ளவர்கள், அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில், ஏற்கனவே தங்களது சுய பாதுகாப்பிற்காக, அதற்கான, 'லைசென்ஸ்' பெற்று தங்களின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆயுத கிடங்குகள் அல்லது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை குறிப்பிட்ட அளவிலான துப்பாக்கிகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் லைசென்ஸ் காலாவதியாகி புதுப்பிக்க தவறியவர்களும் உடனடியாக, தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற ஆயுத கிடங்குகளிலோ அல்லது போலீஸ் ஸ்டேஷனிலோ ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

