/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; நாமக்கல் சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
/
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; நாமக்கல் சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; நாமக்கல் சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; நாமக்கல் சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
ADDED : பிப் 05, 2025 07:29 AM
நாமக்கல்: நிலத்தை அளந்து பட்டா வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ., ஆகிய இருவரையும், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன், 35; இவரது மாமியார், மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க, இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம், நாமக்கல் தாசில்தாருக்கு வந்துள்ளது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, இந்த நிலம் தொடர்பாக விசாரித்து ஒப்புதல் வழங்க, சர்வேயர் அசோக்குமார், 33, அணியார் வி.ஏ.ஓ., வேலுசாமி, 56, ஆகியோருக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சர்வேயர் அசோக்குமார், நில அளவை செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத திருமுருகன், இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை கொடுக்க ஆலோசனை வழங்கினர்.
இதற்கிடையே, திருமுருகனை தொடர்பு கொண்ட வி.ஏ.ஓ., வேலுசாமி, தன்னிடம், 5,000 ரூபாய் கொடுக்குமாறும், அதை அசோக்குமாரிடம் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று இரவு, 7:00 மணிக்கு, திருமுருகன், வி.ஏ.ஓ., வேலுசாமியிடம், 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது அவர், 'சர்வேயர் அசோக்குமார் சொன்னதால் வாங்கினேன்' என, போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நாமக்கல்லில் சர்வேயர் அசோக்குமாரை கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும், லஞ்சு ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.