/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 27, 2024 04:49 PM
நாமக்கல்: நாமக்கல்லில் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களின் பங்குனி தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்த முப்பெரும் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல்லில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவில், மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு புறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி கோவிலும், கிழக்கு புறத்தில் அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் திருக்கோவிலும் உள்ளது.
இந்த, 3 கோவில்களிலும் பங்குனி தேர்த்திருவிழா கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் திருமஞ்சனம், அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. 24ல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து குதிரை வாகன உலாவும்
நடந்தது.
நேற்று காலை, 9:00 மணிக்கு கோட்டை பகுதியில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது. முன்னதாக, நாமகிரித்தாயார், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை நரசிம்ம பெருமாள் உற்சவர்கள் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை
செய்தனர்.
திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு, கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உள்ளிட்டோர், தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர்.மாலை, 4:00 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டம் நடந்தது. தேர்த்திருவிழாவையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

