/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நரசிம்மர் ஜெயந்தி விழா: சுவாமிக்கு தைலக்காப்பு
/
நரசிம்மர் ஜெயந்தி விழா: சுவாமிக்கு தைலக்காப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:17 AM
நாமக்கல், நாமக்கல் நகரின் மைய பகுதியில், ஒரே கல்லில் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், மலை வரதராஜ பெருமாள் கோவிலும், கிழக்கு பகுதியில், அரங்க நாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் குடவறை கோவிலும் அமைந்துள்ளது. இம்மலையின் மேற்கு பகுதியில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிரே, ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்ற நிலையில், நரசிம்மரின் பாதத்தை வணங்கியவாறு பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
ஆண்டுதோறும், வைகாசி விசாக நட்சத்திரத்தன்று நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு, 'தைலக்காப்பு' சாத்துப்படி நடத்தப்படும். அதன்படி, நேற்று, நரசிம்மர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, நரசிம்மர் சுவாமி சந்நதி மூடப்பட்டது. அர்ச்சகர்கள், மூலவர் நரசிம்மர் சிலை மீது நல்லெண்ணெய், பச்சை கற்பூரம், மூலிகைகள் உள்ளிட்டவற்றை கலந்து தைலமாக தயார் செய்து சுவாமி மீது சாத்துப்படி செய்தனர்.
இவ்வாறு சாத்துப்படி செய்யும்போது, அந்த தைலத்தால் சிலையின் மீதுள்ள கழிவுகள் அகன்று விடும். மாலை, 5:30 மணிக்கு, நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.