sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 29, 2024 11:25 AM

Google News

ADDED : ஜன 29, 2024 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பராமரிப்பு இல்லாத

சுரங்கப்பாதையால் விபத்து

காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை போதிய பராமரிப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுரங்கப்பாதையை, குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகிறது.

சுரங்கப்பாதையின் மையப்பகுதியில், கான்கிரீட் தளம் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த பள்ளத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளதால், இரவு நேரத்தில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சுரங்கப்பாதையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் தற்போது குளிர்காலம் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் அதிக பனிப்பொழி உள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கிடமலை, போதமலை, பசிறுமலை, கொல்லிமலை, குருவாளா கரடு, மெட்டாலா கணவாய் ஆகியவை சுற்றியுள்ளன. இதனால், மாவட்டத்தில் மற்ற இடங்களை விட நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில் குளிர் அதிகம் இருக்கும். நேற்று முன்தினம் இரவு முதல் குளிர் அதிகம் இருந்தது. குளிர்காற்று வீசியதுடன் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது.

வெளியே நிற்கும் வாகனங்கள் நனைந்திருந்தன. அதிகாலையில் குளிர்மிகவும் அதிகம் இருந்ததால் பொதுமக்கள், 8:00 மணிக்குத்தான் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இலவச கண் மருத்துவ முகாம்

ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில், 147வது இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை பரிசோதனை முகாம், நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை உள்ள நோயாளிகள், 120 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புறநோயாளியாக, 236 பேர் சிகிச்சை பெற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனுார், பரமத்தி, வெங்கரை, இடையாறு, ப.வேலுார் ஆகிய பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றனர்.

ப.வேலுார் அரிமா சங்க தலைவர் விஜய்கண்ணன், செயலாளர் சிவக்குமார், லட்சுமணன், பொருளாளர் அருண்குமார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்.

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் அறுவடை தொடக்கம்

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், 1,000 ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மஞ்சள் அதிகம் இருப்பதால் தான், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம், நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் மையத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மஞ்சள் அறுவடை தொடங்கி விடும்.

குறிப்பாக, பொங்கல் முடிந்து இரண்டு வாரங்களில் புது மஞ்சள் விற்பனைக்கு வரத்தொடங்கும். ஆனால், இந்தாண்டு பொங்கலுக்கு பின் மஞ்சள் வரத்து இல்லாததால் ஏலமே ரத்து செய்யப்பட்டது. இதனால், சீசன் தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என, மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியான மூலப்பள்ளிப்பட்டி, மெட்டாலா, கார்கூடல்பட்டி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக மஞ்சள் அறுவடை தொடங்கியுள்ளது. மஞ்சள் தாள் அறுத்து, வேகவைத்து சுத்தம் செய்து மஞ்சள் விற்பனைக்கு வர குறைந்தபட்சம், 10 தினங்கள் ஆகும்.

எனவே, மஞ்சள் சீசன் அல்லது புது மஞ்சள் விற்பனைக்கு வர, 2 வாரங்களாவது ஆகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

புத்தக திருவிழாவில் சுகிசிவம் பேச்சு

நாமக்கல்லில் நடந்துவரும் புத்தக திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், 'புத்தகம் என்ன செய்யும்' என்ற தலைப்பில், இலக்கிய பேச்சாளர் சுகிசிவம் பேசினார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், 2-ம் ஆண்டு புத்தக திருவிழா, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.

இந்த புத்தக திருவிழாவில், 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள், 16 பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம்.

குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவு திருவிழா, கலை

நிகழ்ச்சிகள், போட்டிகள்,

அறிவியல் கோளரங்கம், அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், வரும், பிப்., 2 வரை நடக்கிறது.

புத்தக திருவிழாவில், 2ம் நாள் நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நன்செய் இடையாறு தமிழன் கலைக் குழுவின் கால்கோல் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இலக்கிய பேச்சாளர் சுகிசிவம், 'புத்தகம் என்ன செய்யும்' என்ற தலைப்பில் பேசினார். எருமப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செந்தில்குமார், 'சிந்திக்கப் பழகு' என்ற தலைப்பில் பேசினார்.

டி.ஆர்.ஓ., சுமன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் மல்லிகா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

வள்ளலார்

பிறந்த நாள் விழா

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறிய வள்ளலாரின் பிறந்த நாள் விழா, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்த இந்த கூட்டத்தில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். வள்ளலார் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்த யாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி மூட்டை வழங்கப்பட்டன. இதில் பலர் கலந்துகொண்டனர்.

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் இருகரையையும் படர்ந்தபடி, ஆகாயத்தாமரை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து ஆற்றை பார்க்கும் போது, வயல்வெளி போல பசுமையாக காணப்படுகிறது. அந்தளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.

இந்த ஆகாயத்தாமரை செடிகளால், ஆற்றில் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பரிசலில் சென்று மீன் பிடிப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து விஷ ஜந்துக்களின் தொல்லையால், கரையோரத்தில் வசிக்கும் மக்களும் அச்சத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு குறித்து

விழிப்புணர்வு மாரத்தான்

ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி, நேற்று நடந்தது. முன்னதாக, சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் குறித்து, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து பள்ளி தாளாளர், போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியில் இருந்து தொடங்கி, கோனேரிப்பட்டி, புதிய பஸ் ஸ்டாண்ட், சேலம் சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், நாமக்கல் சாலை வழியாக, 5 கி.மீ., துாரம் சென்று பள்ளியை வந்தடைந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.

வெண்ணந்துார் நகர

காங்., கமிட்டி கூட்டம்

வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், தலைவர் சிங்காரம் தலைமையில் நடந்தது. நகர துணைத்தலைவர் தங்கமுத்து முன்னிலை வைத்தார். நகர செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். கூட்டத்தில், கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில மாதங்களாக நுால், பாவு தராததால், கைத்தறி நெசவாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். பாவு, நுால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்துாரில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனை விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், துணைத்தலைவர்கள் தங்கமுத்து, ராஜேந்திரன், காசி பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தந்தைக்கு திதி கொடுக்க

சென்ற மகன் விபத்தில் பலி

சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாச ராகவன், 29. இவர், சேலத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது தந்தை சீனிவாசன், ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, அவருக்கு திதி கொடுக்க, சீனிவாச ராகவன் தனது, 'ஹோண்டா டியூட்' மொபட்டில், நேற்று காலை, 7:00 மணிக்கு, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நாமக்கல் அருகே, பொம்மைகுட்டைமேடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சீனிவாச ராகவன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தைப்பட்டத்தில் நெல் நாற்று நடவு தீவிரம்

துாசூர் ஏரியின் கடைமடை பகுதிகளில், தைப்பட்டமாக நெல் நடவுப்பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எருமப்பட்டி அருகே, துாசூரில், 240 ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, கொல்லிமலையில் கனமழை பெய்யும்போது அங்கிருந்து வரும் நீரால் நிரம்பி வருகிறது. இந்த ஏரியின், 7 மதகு வழியாக திறந்து விடப்படும் தண்ணீரில், ஆண்டுதோறும், 500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்து வந்தனர். ஆனால், கடந்த, 2 ஆண்டாக போதிய வருவாய் இல்லாததால் நெல் நடவுப்பணி, 90 சதவீதம் குறைந்தது. தற்போது, தை மாத பட்டமாக துாசூர் ஏரியின் கடைமடை பகுதிகளில், விவசாயிகள் நெல் நடவு செய்யும் வகையில் கடந்த, 20 நாட்களுக்கு முன், 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள விவசாயிகள் நெல் நாற்று விட்டு வயல் அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

தை மாத பட்டத்தில் நெல் நடவு செய்வதற்காக, துாசூர் ஏரியின், 7 மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள், சோனியா பொன்னி, தனுசு, ஒரு நெல் ஒரு நாத்து ரக நெல் விதைகளை வாங்கி வந்து, நாற்று விட்டுள்ளனர். விரைவில் நடவு பணி துவங்க உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வைக்கோல் தட்டுப்பாடு

ஒரு கட்டு ரூ.240க்கு விற்பனை

எருமப்பட்டி பகுதியில், நெல் அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வைக்கோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எருமப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள நவலடிப்பட்டி, அலங்காநத்தம்,போடிநாய்க்கன்பட்டி உள்ளிட்ட கொல்லிமலை அடிவாரப்பகுதிகளில், விவசாயிகள் தற்போது ஐப்பசி மாத பட்டத்தில் நடவு செய்த நெற்பயிர் அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு போதிய மழை இல்லாததால், எருமப்பட்டியை சுற்றியுள்ள பழையபாளைம், சிங்களகோம்பை, செல்லிபாளையம் ஏரி, எருமப்பட்டி ஏரி உள்ளிட்டவைகளில் தண்ணீரின்றி வறண்டது. இதனால், கிராம பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எருமப்பட்டி பகுதியில் தற்போது நெல் அறுவடை செய்யப்படும் நிலையில், வைக்கோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு ஒருகட்டு வைக்கோல், 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 240 ரூபாய் வரை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us