sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : பிப் 20, 2024 11:09 AM

Google News

ADDED : பிப் 20, 2024 11:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் விசேஷங்களால்

வாழைத்தார் விலை உயர்வு

நாமக்கல், ப.வேலுார் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 500 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்க்கும்; மொந்தன் காய், 5 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரூ.5.13 லட்சத்திற்கு

பட்டுக்கூடு வியாபாரம்

ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 1,220.71 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 480 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 281 ரூபாய்க்கும், சராசரியாக, 420.20 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 5.13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

891 மூட்டை பருத்திரூ.19 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் ஆர்.சி.எச்., ரகம், 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 7,372 ரூபாய், குறைந்தபட்சம், 6,839 ரூபாய்; டி.சி.எச்., அதிகபட்சம், 11,559 ரூபாய், குறைந்தபட்சம், 11,359 ரூபாய்; கொட்டு ரகம், அதிகபட்சம், 4,725 ரூபாய், குறைந்தபட்சம், 4,350 ரூபாய் என, நேற்று ஒரேநாளில், ஆர்.சி.எச்., 841, டி.சி.எச்., 27, கொட்டு ரகம், 50 என, 891 மூட்டை பருத்தி, 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

பவித்திரம் ஆட்டுச்சந்தையில்ரூ.32 லட்சத்திற்கு வர்த்தகம்

எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நவலடிப்பட்டி, செல்லிபாளையம், புதுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு ‍கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த வாரச்சந்தைக்கு துறையூர், முசிறி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். தற்போது, எருமப்பட்டி பகுதியில் வெயில் அதிகரித்துள்ளதால் தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், 32 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

முல்லை பூ கிலோரூ.2,000க்கு விற்பனை

ப.வேலுார் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை, ப.வேலுாரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 800, சம்பங்கி, 50, அரளி, 70, ரோஜா, 180, முல்லை, 800, செவ்வந்தி, 100, கனகாம்பரம், 700,-காக்கட்டான், 400 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், குண்டுமல்லி கிலோ, 1,200,

சம்பங்கி, 100, அரளி, 100, ரோஜா, 240, -முல்லை, 2,000, செவ்வந்திப்பூ, 160,- கனகாம்பரம், 1,300, காக்கட்டான், 700 ரூபாய்-க்கு விற்பனையானது. சுபமுகூர்த்தம், கும்பாபிஷேகத்தால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக, பூ வியாபாரிகள்

தெரிவித்தனர்.

மணல் கடத்திய

டிரைவர் கைது

மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., இளையசூரியன் மற்றும் போலீசார், நேற்று காலை, 9:30 மணிக்கு, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், கரூர் மாவட்டம், நெரூரில் இருந்து போலி பர்மிட்டில், நான்கு யூனிட் மணலை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை சேர்ந்த டிரைவர் பிரவீன், 34, என்பவரை கைது செய்த போலீசார், மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

பகவதியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் போதுப்பட்டி சாலையில் உள்ள ஏ.எஸ்.பேட்டையில், செல்வ விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் வேல் எடுத்தல், கும்பம் பாழித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, வேல், திருவீதி உலா நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, மாவிளக்கு பூஜையும், வாண வேடிக்கையும் நடந்தது. விழாவையொட்டி, பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு, 7:00 மணிக்கு, கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

கருத்தரங்கம்

குமாரபாளையம் அரசு கலைக் கல்லுாரியில், முதல்வர் ரேணுகா வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியை சரவணாதேவி தலைமையில், வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. ஈரோடு வாசவி கல்லுாரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.

அவர் பேசுகையில், ''ஒரு விஷயம் குறித்து மேலும் மேலும் தகவல் சேகரிப்பது தான் ஆய்வு. மனித வளம், நிதி மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

அரசு பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி

நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலையாக, கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி

திட்டத்தில், நாமக்கல் யூனியனில் உள்ள, 11- அரசு நடுநிலை, 10- உயர் நிலை, 4- மேல்நிலை என, மொத்தம், 25 பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு, பிப்., முதல் ஏப்., வரை, மூன்று மாதம் கராத்தே, சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து, தங்களை காத்துக்கொள்ள உதவும் வகையில், தற்காப்பு கலை பயிற்சிகளான கராத்தே, ஜூடோ, சிலம்பம், டேக்வாண்டோ போன்ற கலைகளில், ஏதாவது ஒன்றை வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காப்பு கலை பயிற்சியில் பெண் குழந்தைகள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள், பிற பொருட்களான சாவி, துப்பட்டா, மப்ளர், பை, பேனா, பென்சில்,

புத்தகம், கயிறு மூலம், தங்களுக்கு இடர்பாடுகள் வரும்போது, தற்காத்துக்கொள்ளும் வகையில் பயிற்சி உதவுகிறது.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 50 மாணவியருக்கு, பயிற்சியாளர் தங்கம்மாள், கராத்தே பயிற்சியளித்தார். தலைமையாசிரியர் சிவகாமி, ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினர்.

பஞ்சாயத்து தலைவர் உண்ணாவிரத போராட்டம்

முத்துக்காப்பட்டி பஞ்., நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத தாசில்தாரை கண்டித்து, பஞ்., தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில், நபார்டு மூலம் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், சாலை விரிவாக்கம் செய்யும்போது அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தாருக்கு பஞ்., தலைவர் ‍அருள்ராஜேஸ் கோரிக்கை வைத்தார்.

ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு வருவாய்துறையினர் முறையாக அளவீடு செய்து கொடுக்க வில்லை எனக்கோரி, அந்த பஞ்., தலைவர் பலமுறை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பஞ்., தலைவர் நேற்று தாசில்தாரை கண்டித்து, பஞ்., அலுவலகம் முன், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி

வருகிறார்.

குடிசை வீட்டில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் பாரதி, 45; இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:45 மணியளவில், குடிசை வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. குமாரபாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். விபத்தில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆட்டையாம்பட்டி பிரிவில் பஸ்கள் நிற்க உத்தரவு

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:

ராசிபுரம் - சேலம் மெயின் ரோட்டில் உள்ள, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில், பஸ்கள் நின்று செல்வதில்லை என, பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் போலீசார் மூலம், கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில், புறவழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டில் இரண்டு பக்கத்திலும் மிக அகலமாகவும், நிழற்குடை அமைக்கப்பட்டு விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாமக்கல் வட்டார போக்குவரத்து துறையினர் மூலம் அமைக்கப்பட்ட மசக்காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தை ரத்து செய்து, ஆட்டையாம்பட்டி பிரிவில் பஸ் நிறுத்தம் அறிவித்து, கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால், ஆட்டையாம்பட்டி பஸ் நிறுத்தத்தில், அனுமதிக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர பஸ்கள், ஆட்டையாம்பட்டி பிரிவு மேம்பாலம் வழியாக செல்லாமல், ஆட்டையாம்பட்டி பிரிவு சர்வீஸ் ரோடு வழியாக சென்று, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில், பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில், பஸ்களின் லைசென்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறலால் விசைத்தறி தொழிலாளி பலி

எலச்சிபாளையம், பிப். 20-

எலச்சிபாளையம் யூனியன், செல்லிபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55; விசைத்தறி தொழிலாளி. கடந்த, 10 நாட்களாக சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காததால், நேற்று மாலை, 4:15 மணியளவில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us