/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்சாயத்தில் நுாலகம்: பொதுமக்கள் வேண்டுகோள்
/
டவுன் பஞ்சாயத்தில் நுாலகம்: பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 28, 2024 01:11 AM
டவுன் பஞ்சாயத்தில் நுாலகம்: பொதுமக்கள் வேண்டுகோள்
நாமகிரிப்பேட்டை, செப். 28-
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், நுாலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கான நுாலகம், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்தது. 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கட்டடம், கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தது.
மழைநீர் உள்ளே வரத்தொடங்கியதால், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாகியது. இதனால், புதிய புத்தகங்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்தபோது, இருந்த கட்டடமும் இடிக்கப்பட்டது. இதனால் வாடகை இடத்திற்கு நுாலகம் மாற்றப்பட்டது. நுாலகத்திற்கு தனியாக எங்கும் டவுன் பஞ்சாயத்தில் இடம் ஒதுக்கவில்லை.
அதேபோல், பயன்படுத்தாக புறம்போக்கு நிலமும் போதிய அளவு இல்லாததால், நுாலகம் கட்ட இடம் ஒதுக்கி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி எல்லையில், வாடகை வீட்டில் நுாலகம் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து, வாசகர் வட்ட உறுப்பினர் செந்தில் கூறுகையில், ''நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து கிளை நுாலகத்திற்கு, பொதுமக்கள் வரி செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கிடைக்கிறது. ஆனால், பணத்தை நுாலகத்திற்கு எடுத்து செலவு செய்ய முடியவில்லை. கட்டட வசதி இல்லாததால் நுாலகத்தை மேம்படுத்த முடியவில்லை. நூலகத்துறையிடம் பல முறை மனு செய்துள்ளோம். டவுன் பஞ்சாயத்தில், மக்கள் பயன்பாட்டிற்கு நுாலகம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது,'' என்றார்.