/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வைகாசி பட்டத்தில் வெங்காயம் சாகுபடி
/
வைகாசி பட்டத்தில் வெங்காயம் சாகுபடி
ADDED : ஜூன் 12, 2025 01:59 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. இந்த பட்டத்தில் குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால், வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இதை எதிர்பார்த்து, வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால், தற்போது விதை வெங்காயத்தின் விலை, 50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இவை பெரம்பலுார் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்து இப்போது பயிர் செய்து வருகின்றனர். விதை வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது அதன் காரணமாக விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதால் பல விவசாயிகள் மஞ்சள் பயிரில், ஊடு பயிராக சின்ன வெங்காயம் பயிர் செய்கின்றனர். தற்போது நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை, மூன்று மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்து புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மீண்டும் நடவிற்காக பயன்படுத்துவர்.
தற்போது நடவு செய்யப்படும் வெங்காயத்தை விற்பனைக்கு கொடுக்க யாரும் முன் வர மாட்டார்கள். தற்போது எதிர்பார்த்ததை விட நல்ல மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் பயிர் செய்யும் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.