/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மெகா' சைஸ் ரவுண்டானாவால் மக்கள் அவதி
/
'மெகா' சைஸ் ரவுண்டானாவால் மக்கள் அவதி
ADDED : டிச 17, 2024 01:47 AM
மோகனுார், டிச. 17-
மோகனுார் முதல் ராசிபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மோகனுார் முதல் லத்துவாடி வரை உள்ள சாலையை, இரு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இப்பணியின் போது, மோகனுார் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், முக்கோண வடிவில், இரண்டு ரவுண்டானா அமைக்கப்பட்டது. அப்போதே அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, ஒரே ரவுண்டானாவாக அமைக்க வலியுறுத்தினர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து சீராக இல்லாமல், தாறுமாறாக வாகனங்கள் சென்று வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதனால், முறையாக சாலை அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மோகனுார் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், வாங்கல் பிரிவு சாலையிலும், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக, 2 ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.
பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், 'மெகா' சைஸ் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.
சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து அமைப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை நடுவில் பேரிகார்டு அமைப்பதால், சாலை குறுகி காணப்படுகிறது. அதனால், வாகன
ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது.
'பல்வேறு தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு, ரவுண்டானா அளவை குறைக்கவும், சாலையில் போடப்பட்டுள்ள பேரிகார்டை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை
விடுத்துள்ளனர்.

