/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீரான குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
/
சீரான குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 12, 2025 01:14 AM
எருமப்பட்டி எருமப்பட்டி யூனியன், கொடிக்கால்புதுார் பஞ்., துாசூரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு, பஞ்., மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக வழங்கவில்லை. இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த துாசூர் கிராம மக்கள், நேற்று காலை, நாமக்கல்-துறையூர் சாலையில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாமக்கல் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் ஊரில், மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீர் மாசடைந்ததால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை. இதனால், போர்வெல் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். தற்போது, இந்த தண்ணீரும் வரவில்லை. இதனால், எங்களுக்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டும்' என்றனர்.

