/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எளையாம்பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் அளவீடு செய்துதர மக்கள் உண்ணாவிரத போராட்டம்
/
எளையாம்பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் அளவீடு செய்துதர மக்கள் உண்ணாவிரத போராட்டம்
எளையாம்பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் அளவீடு செய்துதர மக்கள் உண்ணாவிரத போராட்டம்
எளையாம்பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் அளவீடு செய்துதர மக்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 04, 2024 11:37 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை பஞ்., எளையாம்பாளையம் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, குடியிருப்புகளில் விரிசலால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இக்குவாரிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த கல்குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக கூறி, கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு குவாரிகளில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் குவாரிகள் செயல்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறையினர் உரிய அளவீடு செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என, கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுசம்பந்தமாக, சில மாதங்களுக்கு முன், கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி டி.எஸ்.பி., இமயவரம்பன், நேரில் வந்து, 45 நாட்களுக்குள் அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது, 85 நாட்களாகியும் எந்த அளவீடும் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால், உடனடியாக உரிய அளவீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, நேற்று, மீண்டும் கோக்கலை கிராம மக்கள் போராட்டக்குழு தலைவர் பழனிவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள் பூசன், செந்தில்குமார், தமிழ்நாடு விவசாய சங்க நிறுவனர் ஈசன், முருகசாமி, நாமக்கல் புறநகர் மாவட்ட கொ.ம.தே.க., தலைவர் பெரியசாமி, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ரங்கசாமி, கவுன்சிலர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த், போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரும், 6ம் தேதிக்குள் அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில், மக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு சென்றனர்.