ADDED : நவ 04, 2025 02:03 AM
நாமக்கல், வெண்ணந்துார் யூனியன், ஓ.சவுதாபுரம், மணல்காடு கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மணல்காடு கிராமத்தை சேர்ந்த எங்களுக்கு, கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறையால், 70 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. தற்போது, ஒரே குடும்பத்தில், இரண்டு, மூன்று குடும்பங்கள் உருவாகிவிட்டன. திருமணமான குடும்பத்தினருக்கு, தனியாக வீடு இருந்தால் மட்டும் தான், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதனால், அதே பகுதியில் இலவச வீட்டுமனை வழங்க ஏதுவாக, வகைப்பாட்டில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு அளவீடு செய்து நத்தம் வீட்டு மனைகளாக வகைப்பாடு செய்து, முறையான பயனாளிகள் தேர்வு செய்து இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

