ADDED : நவ 02, 2025 12:47 AM
பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட களியனுார் பஞ்., கட்டிபாளையத்தில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டம் துவங்கியதும், பஞ்., மூலம் செய்யப்பட்ட பணிகளுக்கான வரவு, செலவு கணக்கை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் என, பொதுமக்கள் கேட்டனர்.
இதனால் டென்ஷனான அதிகாரிகள், பாதியிலேயே சென்று விட்டனர்.
இதை கண்டித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பிரபாகரன், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், பள்ளிப்பாளையம் யூனியன் பி.டி.ஓ., சுரேஷ் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார், வருவாய்துறை அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம சபை கூட்டம் நடக்கும்போது பாதியில் சென்ற அதிகாரிகள், கூட்டத்திற்கு வராத அதிகாரிகள், விதிமீறிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதற்கு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

