/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அன்னாசி விளைச்சல் அமோகம் விலை உயர்வால் மகிழ்ச்சி
/
அன்னாசி விளைச்சல் அமோகம் விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஆக 29, 2025 01:22 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில் அன்னாசி பழ விளைச்சல் அதிகரித்து, விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொல்லி மலையில் பலா, அன்னாசி பழங்களின் விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பழங்கள், பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றபின் முதலில் வருவது சோளக்காடு கிராமம். இங்குள்ள பழங்குடியினர் சந்தை தினமும் நடக்கிறது.
அங்கு அன்னாசி பழம், பலாப்பழம் மற்றும் இதர பழ வகைகளும் கிடைக்கும். அதேபோல் அரப்பளீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் காணப்படும் தெம்பலம் வாரச்சந்தையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அன்னாசி பழங்களின் விற்பனை நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு, 25 காய்கள் கொண்ட ஒரு சிப்பம் ரூ.400 முதல், 500 வரை விற்பனையானது. தற்போது ஒரு சிப்பம், 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்னாசி பழ விலை உயர்வால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியூர் நாடு, குண்டூர் நாடு ஆகிய ஊராட்சிகளில் அன்னாசி பழம் விளைவதற்கான தட்பவெப்ப நிலை இருந்து வருவதால், அங்கு அதிகளவில் விளைந்து வருகிறது.