/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
/
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 14, 2024 07:11 AM
நாமக்கல்: 'தமிழக பள்ளிக்கல்வித்துறை, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க, மாநில தலைவர் ராமு, தமிழக அரசுக்கு கோரிகமனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, 'மேல்நிலை முதலாமாண்டுக்கு, மாநில அளவிலான பொது தேர்வாக நடத்தப்படும்' என, அரசாணை வெளியிட்டது. அதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் என, இரண்டும் உயர் கல்விக்கு செல்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் எதற்கும் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, தொடர்ந்து, மூன்று பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதால், பெரிதும் மனச்சோர்வு அடைந்துள்ளனர். நடப்பாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இவர்கள் மீண்டும் துணை தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற முடியாத நிலையில், மாற்று சான்றிதழ் பெற்று, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கேட்டரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு படையெடுத்துள்ளனர்.
இதனால், பிளஸ் 2 படிக்காமல் பாதியிலேயே, ஏராளமான மாணவர்கள் பள்ளியைவிட்டு செல்லக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இடைநிற்றலுக்கு ஆளாக கூடிய மாணவர்கள் யார் என கணக்கிட்டு பார்த்தால், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களே அதிகம் உள்ளனர். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., நாட்டில் உள்ள பிற மாநிலங்களிலும், பிளஸ் 1 பாடத்திற்கு, மாநில அளவிலான பொதுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, உயர்கல்விக்கு மாணவர்கள் செல்வதற்கான, 'நான் முதல்வன்' திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், 100 சதவீதம் வெற்றி அடைவதற்கு, பிளஸ் 1 பொதுத்தேர்வு தற்போது தடையாக உள்ளது. காரணம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழக முதல்வரின் சிறந்த திட்டமான, 'நான் முதல்வன்' திட்டம், 100 சதவீதம் வெற்றி அடைய, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டியது அவசியமான ஒன்று.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதியும், அவர்கள், 100 சதவீதம் பள்ளிக்கு வருவதற்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் இருக்கும் மாநில அளவிலான மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்து, மாவட்ட அளவிலான தேர்வாக நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

