/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூதாட்டி கொலையில் போலீசார் திணறல் 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
/
மூதாட்டி கொலையில் போலீசார் திணறல் 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
மூதாட்டி கொலையில் போலீசார் திணறல் 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
மூதாட்டி கொலையில் போலீசார் திணறல் 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
ADDED : ஜூன் 10, 2025 01:32 AM
ப.வேலுார், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை குத்தி கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க, 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த சித்தம்பூண்டி, குளத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசப்பன் மனைவி சாமியாத்தாள், 67; ராசப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், தோட்டத்து வீட்டில் சாமியாத்தாள் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா என மகன், மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். சாமியாத்தாள், கடந்த, 7ல், உறவினர் வீட்டு திருமணத்திற்கு தங்க செயின், தங்க வளையல் போட்டுக்கொண்டு சென்றுள்ளார். பின், வீடு திரும்பிய சாமியாத்தாள், நகையை கழற்றி பத்திரமாக வைத்துவிட்டு, வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து துாங்கியுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு, துாங்கிக்கொண்டிருந்த சாமியாத்தாளின் வாயை பொத்தி நகையை கேட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதால், மூதாட்டி கழுத்து, வாய், முகம் என, மாறி மாறி கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகினர். கழுத்தில் கத்திக்குத்து விழுந்த நிலையில், உறவினர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு வந்த உறவினர்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு, கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.எஸ்.பி., சங்கீதா உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, மர்ம நபர்களை பிடிக்க, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, டி.எஸ்.பி., சங்கீதா, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், வேலகவுண்டம்பட்டி, எலச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர்கள் தேவி, ராதா உள்ளிட்டோர் தலைமையில், 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தனரா, சொத்துப்பிரச்னையா, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற எந்த துப்பும் கிடைக்காததால், போலீசார் திணறி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் புரியாத புதிராக உள்ளது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நடந்ததுபோல், தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து கொலை செய்யும், கும்பல், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்குமோ என, கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.