/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 17 பேருக்கு உத்தரவு
/
முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 17 பேருக்கு உத்தரவு
முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 17 பேருக்கு உத்தரவு
முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 17 பேருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 06, 2025 12:54 AM
நாமக்கல், மாவட்டத்தில், முதுகலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 17 பேர் இடமாறுதல் பெற்றனர்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த, 1ல் தொடங்கி நடந்து வருகிறது. 1ல், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் அளிக்கும் கலந்தாய்வும், 2ல், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வும், 3ல், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடந்தது.
அதில், நாமக்கல் மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்த, 16 பள்ளிகளுக்கும், தலைமையாசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடந்த இந்த கலந்தாய்வு மூலம், அரியலுார், திருப்பூர் போன்ற வெளி மாவட்டங்களில் பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள், சொந்த மாவட்டத்திற்கு வந்துள்ளனர். மேலும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வின் மூலம், இந்த மாவட்டத்தில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்திலேயே தலைமையாசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் மாறுதல் அளிப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு, 292 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில், 122 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், 17 முதுகலை ஆசிரியர்கள், தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்து இடமாறுதல் பெற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அவர்களுக்கான உத்தரவை வழங்கி, 'புதிய பணியிடத்தில் உடனடியாக சேரும்படி' ஆசிரியர்களை அறிவுறுத்தினார்.