/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஸ்டாப்பில் நிற்காமல் தனியார் பஸ்கள் அடாவடி; முன்னதாகவே இறக்கி விடுவதால் பயணியர் அவதி
/
ஸ்டாப்பில் நிற்காமல் தனியார் பஸ்கள் அடாவடி; முன்னதாகவே இறக்கி விடுவதால் பயணியர் அவதி
ஸ்டாப்பில் நிற்காமல் தனியார் பஸ்கள் அடாவடி; முன்னதாகவே இறக்கி விடுவதால் பயணியர் அவதி
ஸ்டாப்பில் நிற்காமல் தனியார் பஸ்கள் அடாவடி; முன்னதாகவே இறக்கி விடுவதால் பயணியர் அவதி
ADDED : டிச 03, 2025 07:59 AM

நாமக்கல்: 'ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தாமல், தனியார் பஸ் டிரைவர்கள் முன்னதாகவே இறக்கிவிட்டு செல்வதால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இவற்றை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, நாமக்கல்-சேலம் சாலை, முதலைப்பட்டியில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11.90 ஏக்கர் நிலத்தில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொகையும், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
அங்கு, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டை, 2024 செப்.,ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, அக்., 10 முதல், பஸ் போக்குவரத்து துவங்கியது.
திருச்சி, துறையூரில் இருந்து வரும் பஸ்கள், டிராவலர்ஸ் பங்களா முன்பும், மோகனுாரில் இருந்து வரும் பஸ்கள், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அருகிலும், கரூர், ப.வேலுாரில் இருந்து வரும் பஸ்கள், வள்ளிபுரத்திலும், கோவை, ஈரோட்டில் இருந்து வரும் பஸ்கள், கோஸ்டல் ரெசிடென்சி அருகிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அவற்றை பெரும்பாலான தனியார் பஸ்கள் கடைப்பிடிப்பது இல்லை. மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறையினர் குறிப்பிட்ட இடத்தில் பஸ்களை நிறுத்தாமல், பல கி.மீ., துாரத்திற்கு முன்பே நிறுத்தி பயணிகளை இறக்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கரூர், ப.வேலுாரில் இருந்து வரும் தனியார் பஸ்கள், 'வள்ளிபுரத்தில் நிறுத்தம் இல்லை' எனக்கூறி, கீரம்பூர் டோல்கேட்டில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். ஆனால், கரூர்-நாமக்கலுக்கு, 35 ரூபாய் கட்டணம் வசூல் செய்துவிடுகின்றனர். தனியார் பஸ் டிரைவர்களின் அடாவடியால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து துறையினரிடம் கேட்டபோது, 'புது பஸ் ஸ்டாண்ட் மாற்றும்போதே, எங்கெங்கு பஸ் ஸ்டாப் போடப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவித்ததுடன், தபால் மூலம் விளக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் பயணியர் நிழற்கூடம் இல்லை. அதனால், தனியார் பஸ் டிரைவர்கள் நிற்பதில்லை. இதுகுறித்து சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்' என்றனர்.

