/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1.38 டன் ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு 'காப்பு'
/
1.38 டன் ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு 'காப்பு'
ADDED : டிச 11, 2024 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், நாமக்கல் மாவட்ட வழங்கல்துறை அலுவலர்களுடன் இணைந்து திருச்செங்கோடு தொண்டிக்கரடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில், 2 வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், திருச்செங்கோட்டை சேர்ந்த கார்த்திகேயன், 34, என்பதும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவர் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தபோது, 23 சாக்கு மூட்டைகளில், 1.38 டன் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திகேயனையும் கைது செய்தனர்.