/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
/
மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 12, 2025 01:38 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட குளத்துக்காடு பகுதியில் சமத்துவ மயானம் உள்ளது. இதில், கிறிஸ்தவர்கள் ஒரு பகுதியாகவும், மீதமுள்ள பகுதிகளில் ஹிந்துக்களும், இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்தவர்கள், உறவினர்களின் சமாதி மீது சிலுவைகளை பதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மயானம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, மத அடையாளங்களை இங்கு வைக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதக்கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து, நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படாததால், கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நில அளவையர்கள் மயானத்தை அளவிடும் பணியை தொடங்கினர்.
இதையறிந்த பொதுமக்கள், மயானம் முன் திரண்டு மயானத்தை அளவீடு செய்யக்கூடாது; மத அடையாளங்களை கொண்டு மயானத்தை பிரிக்க கூடாது என வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அளவீடு பணி நடக்காது என, உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.