/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் - அவரது கணவர் மீது வழக்குப்பதிய கோரி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் - அவரது கணவர் மீது வழக்குப்பதிய கோரி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் - அவரது கணவர் மீது வழக்குப்பதிய கோரி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் - அவரது கணவர் மீது வழக்குப்பதிய கோரி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 26, 2025 12:57 AM
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யவும், துப்புரவு மேற்பார்வையாளர் மீது கொடுத்த பொய் புகாரை ரத்து செய்யக்கோரியும், துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்., தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி உள்ளார். இவரது கணவர் முரளி. இவர்கள் இருவரும், அனைத்து பணிகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதால், 17 கவுன்சிலர்கள் சேர்ந்து தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தற்போது அந்த தீர்மானம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தலைவர் லட்சுமி, கணவர் முரளி ஆகிய இருவரும், துப்புரவு மேற்பார்வையாளர் தாமரைச்செல்வி மற்றும் துாய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறி அவர்கள், கடந்த, 20ல் ப.வேலுார் போலீசில் புகாரளித்தனர். ஆனால், போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தற்காலிக துாய்மை பணியாளர் காவியா, 30, போலீசில் ஒரு புகாரளித்துள்ளார். அதில், 'துப்புரவு மேற்பார்வையாளர் தாமரைச்செல்வி, தன்னை தரக்குறைவாக பேசுவதாக' தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த துாய்மை பணியாளர்கள், 40க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ப.வேலுார் டவுன் பஞ்., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், தாமரைச்செல்விக்கு ஆதரவாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன், 'தங்களது புகாரை போலீஸ் ஸ்டேஷனில் வந்து தெரிவிக்கலாம்' என, கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டு அனைவரும், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். இதையறிந்த மற்ற துாய்மை பணியாளர்களும், தாமரை செல்விக்கு ஆதரவாக ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, டி.எஸ்.பி., சங்கீதா இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: துப்புரவு மேற்பார்வையாளர் தாமரைச்செல்வி மீது கொடுத்த புகார் அனைத்துமே பொய்யானவை. தலைவர் லட்சுமி துாண்டுதலின்பேரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துாய்மை பணியாளர்கள் கொடுத்த புகார் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், டவுன் பஞ்., தலைவர் லட்சுமி மற்றும் கணவர் முரளியிடம் விசாரணை கூட மேற்கொள்ள போலீசார் தயங்குகின்றனர். துாய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசிய தலைவர் லட்சுமி, கணவர் முரளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பொய் புகார் அளித்த காவ்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் பாரபட்சம் காட்டினால் மேற்கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.