ADDED : ஏப் 26, 2026 05:22 AM
நாமக்கல்:ஆண்டுதோறும், ஏப்., கடைசி சனிக்கிழமை, உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கருப்பொருளாக, 'கால்நடை மருத்துவர்கள், உணவு மற்றும் ஆரோக்கியத்தின் பாதுகாவலர்கள்' என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சிகிச்சை துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்து, முகாமை தொடக்கி வைத்தார். சிகிச்சைகள் துறை தலைவர் கதிர்வேல் வரவேற்றார். முகாமில், நாய்கள், பூனை உள்பட, 75 செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடை தீவனத்துறை தலைவர் வசந்தகுமார், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை தலைவர் பழனிசாமி ஆகியோர் முகாம் குறித்து விளக்கினர். உலக கால்நடை மருத்துவ தினத்தை கால்நடை மருத்துவர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
