/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ரூ.70 கோடியில் ரயில்வே பாலம்: எம்.பி.,
/
நாமக்கல்லில் ரூ.70 கோடியில் ரயில்வே பாலம்: எம்.பி.,
நாமக்கல்லில் ரூ.70 கோடியில் ரயில்வே பாலம்: எம்.பி.,
நாமக்கல்லில் ரூ.70 கோடியில் ரயில்வே பாலம்: எம்.பி.,
ADDED : டிச 26, 2024 01:21 AM
நாமக்கல், டிச. 26-
''நாமக்கல் புதிய பைபாஸ் சாலையில், 70 கோடி ரூபாயில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
நாமக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சேலம் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் இருந்து, சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனுார் சாலை வழியாக வள்ளிபுரம் அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புதிய ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு, தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இப்பணி, 3 கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே, சேலம் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை முதல் கட்டப்பணிகள் முடிவடைந்து, புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி வரை, 2ம் கட்ட பணியும், சேந்தமங்கலம் சாலையில் இருந்து திருச்சி சாலை என்.புதுப்பட்டி வரை, 3ம் கட்டப்பணியும் வேகமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டத்தில், மரூர்பட்டி அருகே ரயில் பாதை அமைந்துள்ளது. அந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரிய தலைவரை, டில்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. 1 கி.மீ., துாரமுள்ள ரயில்வே மேம்பாலப்பணிகள், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், நாமக்கல்லில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட, 5 கோடி முட்டைகள் அங்கு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து, தமிழக முதல்வர் அறுவுறுத்தல்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அணுகி கோரிக்கை விடுத்தேன். அவரது ஏற்பாட்டின்படி, ஓமன் நாட்டில் உள்ள இந்திய துாதரகம் மூலம் அந்நாட்டின் அதிகாரிகளுடன் பேசி, தற்போது முட்டை ஏற்றுமதி சீரடைந்துள்ளது.
இதேபோல், கத்தார் நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து வரும், 28ல் முட்டை ஏற்றுமதியாளர்கள் மூலம் டில்லியில் உள்ள கத்தார் துாதரகத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. நாமக்கல்லில் புராண சிறப்பு பெற்ற கமலாலயக்குளத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்னதாக தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றதாகவும், தற்போது மீண்டும் தெப்ப தேரோட்டம் நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனுமதி வேண்டி தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் தெப்ப தேரோட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

