/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடையில் சிவப்பு நிறத்தில் ஆறாக சென்ற சாயக்கழிவு
/
ஓடையில் சிவப்பு நிறத்தில் ஆறாக சென்ற சாயக்கழிவு
ADDED : ஜன 14, 2024 12:30 PM
பள்ளிப்பாளையம்:ஆவத்திபாளையம் ஓடையில், சாயக்கழிவுநீர் சிவப்பு நிறத்தில் ஆறாக சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிப்பாளையத்தில் களியனுார், ஆவத்திபாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இங்கிருந்து, விதிமுறை மீறி சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் சாய கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்து பிரச்னைகள் ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு களியனுார் பஞ்., பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் குமாரபாளையம் மாசுகட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், மாசுகட்டுபாட்டுவாரிய அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று, அப்பகுதி ஓடையில் சென்ற சாய கழிவுநீரை காட்டினர். இதனை தொடர்ந்து, குமாரபாளையம் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், அப்பகுதியில் விதிமுறை மீறி செயல்பட்ட 7 சாய ஆலைகளுக்கு சீல் வைத்தனர். ஆனால் சில நாட்களில், மீண்டும் சாயஆலைகள் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஆவத்திபாளையம் பகுதியில் செல்லும் ஓடையில், சிவப்பு நிறத்தில் சாய கழிவுநீர் ஆறாக சென்றது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஆவத்திபாளையம் மக்கள் கூறியதாவது;
ஆவத்திபாளையம் சுற்றுவட்டாரத்தில் செயல்படும் சாய ஆலைகள், இரவு நேரத்தில் சாய கழிவுநீரை ஓடையில் திறந்து விடுகின்றனர். ஓடையோரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் சாயக்கழிவுநீர் நெடியால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவில் ஓடையில் ஆறாக சாயக்கழிவுநீர் சென்றது. இம்மாதம் இறுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்படும். மாசுகாட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் மீது, கலெக்டரிடம் புகார் கொடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

