ADDED : மே 12, 2025 04:05 AM
நாமக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, 'சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்பினர் வைத்துள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்' என, உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உமா, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் அறிவுரைப்படி, கடந்த இரண்டு நாட்களாக மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்பினரின் கொடி கம்பங்களை, மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்) கலைவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், ஜான் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், நேற்று திருச்சி சாலை, மோகனுார் சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் இருந்து கொடி கம்பங்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். கடந்த, இரண்டு நாட்களில் 19 கொடி கம்பங்களை அரசியல் கட்சியினரே முன்வந்து அகற்றிவிட்டனர். மேலும், மாநகர பகுதியில் அகற்றப்படாமல் இருந்த, 70 கொடிகம்பங்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.இதேபோல், வெண்ணந்துார், பள்ளிப்பாளையத்தில், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.